ADDED : பிப் 01, 2025 01:55 AM
பெரோஸ்பூர் பஞ்சாபில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குருஹர்சகாய் பகுதியில் இருந்து, ஜலலாபாதில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கேட்டரிங் ஊழியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றனர்.
அந்த வேன் கொலுகா மோர் கிராமம் அருகே நேற்று காலை சென்றபோது, டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 15 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சாலை பாதுகாப்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, குருஹர்சகாய் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சிலர், முதலுதவி சிகிச்சைக்கு பின் பரிட்காட் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.