ஹரியானா, ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 பேர் பலி
ஹரியானா, ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 பேர் பலி
ADDED : அக் 13, 2024 02:29 AM

கைதல் : ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் சிக்கி, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானாவில் கைதால் மாவட்டத்தின் தீக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தசரா நிகழ்வில் பங்கேற்க காரில் சென்றனர்.
அப்போது முன்றி கிராமத்தின் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக அவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் காரில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், ஐந்து சிறுமியர் என, மொத்தம் எட்டு பேரின் உடல்களை மீட்டனர். படுகாயங்களுடன் கார் டிரைவர் மீட்கப்பட்டார்.
இதற்கிடையே, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாகவும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் மூவர் பலி: ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பாலாஜி கோவிலில் வழிபட நேற்று காரில் சென்றனர்.
டில்லி - மும்பை விரைவுச்சாலை வழியாக சென்ற அந்த கார், அல்வார் மாவட்டத்தின் பெதோலி கிராமத்தின் அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் டிரைவர் காரை இயக்கினார்.
இதன் காரணமாக, அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.