கர்நாடகாவில் டிரெக்கிங் சென்று மாயமான 11 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மீட்பு!
கர்நாடகாவில் டிரெக்கிங் சென்று மாயமான 11 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மீட்பு!
ADDED : ஜூன் 10, 2025 06:31 PM

சிக்மகளூரு: கர்நாடகாவில் வனப்பகுதியில் டிரெக்கிங் சென்று மாயமான 11 பேர் கொண்ட மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கர்நாடகாவில் சிக்மகளூரு மாவட்டத்தில் பல்லாலராயணா துர்கா வனப்பகுதியில் 11 பேர் கொண்ட மருத்துவ மாணவர்கள் டிரெக்கிங் சென்றுள்ளனர். இந்த குழுவில் 5 ஆண்கள், 6 பெண்கள் இடம்பெற்று இருந்தனர்.
பல்லாலராயணா துர்கா பகுதியில் இருந்து பண்டாஜே அருவிக்குச் செல்வது அவர்களின் பயணத்திட்டம். அடர் வனப்பகுதியில் குழுவாக அவர்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். பயணத்தை ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அவர்கள் செல்லும் வழியை தவற விட்டனர்.
அடர்ந்த காடுகள் என்பதால் அவர்கள் பாதையை தொலைத்துவிட்டு எங்கு செல்வது என தெரியாமல் தவித்துள்ளனர். மருத்துவ மாணவர்கள் மாயமானது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூர் போலீசுக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, வனப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களில் ஆரிப், சந்தோஷ் அட்டிகிரே, சஞ்சய் ஆகிய 3 பேருடன் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பல மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பின்னர் 11 பேரையும் எவ்வித காயங்களும் இன்றி மீட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து, வனப்பகுதிக்குள் அனுபவம் இல்லாதவர்கள் டிரெக்கிங் செல்ல வேண்டாம். அப்படியே செல்ல நேரிட்டாலும் காட்டுப்பகுதியைப் பற்றி நன்கறிந்த உள்ளூர் மக்கள் சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாயமாகி மீட்கப்பட்ட 11 பேரும் தங்களின் டிரெக்கிங் பயணத் திட்டத்துக்கு உரிய முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற்றிருந்தது, குறிப்பிடப்பட்டது.