பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்தது சம்பவம் ஒரு விபத்து: சொல்கிறார் கார்கே
பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்தது சம்பவம் ஒரு விபத்து: சொல்கிறார் கார்கே
ADDED : ஜூன் 11, 2025 06:21 PM

புதுடில்லி : '' பெங்களூருவில் 11 பேர் உயிரிழக்க காரணமான கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு விபத்து,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 4ம் தேதி ஆர்சிபி அணி வீரர்களை பார்க்க திரண்ட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது.
இது தொடர்பாக கார்கே கூறியதாவது: கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது யாரேனும் பதவி விலகினார்களா? அது குறித்து நான் அதிகம் பேசவில்லை. அந்நிகழ்வில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். நான் வெளியிட்ட ஒரு அறிக்கைக்காக என்னை அதிகம் விமர்சித்தனர். ஆனால், பல உடல்கள் ஆற்றில் மிதந்து சென்றன.
இது மட்டும் அல்லாமல் கோவிட் காலகட்டத்திலும் உ.பி.,யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு யாரேனும் பொறுப்பு ஏற்றனரா?
உள்நோக்கத்துடன் நடந்து இருந்தால் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால், பெங்களூரு சம்பவம் ஒரு விபத்து. நிச்சயம் இது தவறு தான். இதற்காக எங்கள் கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.