வருணா கிராமத்தில் கிடைத்த 11ம் நுாற்றாண்டு சிலைகள்
வருணா கிராமத்தில் கிடைத்த 11ம் நுாற்றாண்டு சிலைகள்
ADDED : ஜன 02, 2024 06:46 AM

மைசூரு: மைசூரின் வருணா கிராமத்தில், பாதாள சாக்கடை தோண்டும் போது, 11ம் நுாற்றாண்டை சேர்ந்த மூன்று ஜெயின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
மைசூரு மாவட்டம், வருணா கிராமத்தில் பாதாள சாக்கடை தோண்டும் பணி நடந்தது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தோண்டும் போது, சிலைகள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக பணியை நிறுத்தி ஊழியர்கள், கிராம மக்கள், மைசூரில் உள்ள தொல்லியல் மற்றும் பாரம்பரிய துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கிராமத்துக்கு வந்த துறை இணை இயக்குனர் மஞ்சுளா, வரலாறு நிபுணரும், பாரம்பரிய நிபுணருமான பேராசிரியர் ரங்கராஜு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக, பேராசிரியர் ரங்கராஜு கூறியதாவது:
கண்டெடுக்கப்பட்ட மூன்று ஜெயின் சிலைகள் உடைந்த நிலையில் உள்ளன. கூஷ்மாண்டினி தேவி சிலையின் கைகள் வித்தியாசமானது.
மற்றொரு ஜெயின் தீர்த்தங்கரர் சிலையின் தலை மட்டும் உள்ளது. பணியின் போது ஜே.சி.பி., இயந்திரத்தால் சேதமடைந்திருக்கலாம். மற்றொரு சிலை பாதி மட்டுமே கிடைத்துள்ளது.
இங்கு அகழ்வாராய்ச்சி செய்தால், மேலும் பல சிலைகள் கண்டுபிடிக்கப்படலாம். தலக்காடு, ஹெம்மிகே, மூகூர், டி.நரசிப்பூர், வரகுடு, வருணா, வஜமங்களா, மைசூரு புறநகர், குமரபீடு ஆகியவை கங்கர்களின் ஆட்சியின் போது, டி.நரசிப்பூருக்கு அருகில் உள்ள தலக்காட்டில் உள்ள முக்கிய சமண கிராமங்களாக இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

