ADDED : அக் 21, 2024 06:48 AM
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அதிவேகமாக சென்ற பஸ் மோதியதில் டெம்போவில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சொகுசு பஸ் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தின் சுமிபூர் அருகே சென்றபோது டெம்போ மீது பஸ் பயங்கரமாக மோதியது.
இதில் பரோலி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஜெய்ப்பூர் திரும்பிக்கொண்டிருந்த கரிம் கும்வாத் காலனியின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
விபத்து குறித்து அறிந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, கவர்னர் ஹரிபாவ் பகாடே, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயம் அடைந்த நபருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவருக்கு 50,000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

