ADDED : ஜன 17, 2025 02:02 AM
பிஜப்பூர், சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 12 நக்சல்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்கு பிஜப்பூர் வனப்பகுதியில் நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசாரை உள்ளடக்கிய பாதுகாப்பு படையினரின் கூட்டுக்குழுவினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை துவங்கிய இந்த வேட்டையின் போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை இரு தரப்பினர் இடையே நடந்த இந்த துப்பாக்கி சண்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
உயிரிழந்த நக்சல்கள் உடல்களை தேடும் பணி நடக்கிறது. சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
என்கவுன்டரில் நேற்று கொல்லப்பட்ட 12 பேரையும் சேர்த்து, இந்த மாதம் மட்டும் 26 நக்சல்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.
பிஜப்பூர் மாவட்டத்தின் மட்டேடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 12ம் தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் இரு பெண்கள் உட்பட ஐந்து நக்சல்கள் கொல்லப்பட்டனர்.