பங்கார்பேட்டையில் வீடு இடிந்தது 3 குடும்பத்தின் 12 பேர் உயிர் தப்பினர்
பங்கார்பேட்டையில் வீடு இடிந்தது 3 குடும்பத்தின் 12 பேர் உயிர் தப்பினர்
ADDED : நவ 09, 2024 03:34 AM

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையில் நேற்று மதியம் திடீரென மூன்று அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக அந்த கட்டட விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பங்கார்பேட்டை குப்புசாமி முதலியார் தெருவில் பூதிகோட்டையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தில் மூன்று குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர். மூன்று குடும்பத்திலும் சேர்த்து 12 பேர் வசித்து வந்தனர்.
முப்பது ஆண்டுகள் பழமையான, தரமற்ற கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சமும் அங்கிருப்போருக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் வீடு ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதை அதே பகுதியில் வசித்து வரும், அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன் கவனித்துள்ளார். இதனால், அந்த கட்டடத்தில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் எடுத்து கூறியுள்ளார். கட்டடத்தில் யாருமே இருக்க வேண்டாம்; அந்த பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என்றும் எச்சரித்து உள்ளார். இதனால் அந்த கட்டடத்தில் குடியிருந்த 12 பேருமே வெளியேறினர்.
இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில், கட்டடத்தின் ஒரு பகுதி, மெல்ல சாய்வதாக அவ்வழியே சென்ற மின்வாரிய ஊழியர் பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள அனைவரையும் வெளியேறும்படி உரக்க கூச்சலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அக்கட்டடத்தில் இருந்தோர் அக்கம் பக்கத்தில் உள்ளோர் பலரும் அலறியடித்து ஓடி வெளியேறினர். ஐந்தே நிமிடத்தில், இந்த கட்டடம் சரிந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
கட்டடம் இடிந்து விழுந்தது எப்படி; கட்டடம் கட்டுவதற்கு பிளான், உரிமம், அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தனர்.
தீயணைப்பு படையினர் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டட உரிமையாளர் ராஜ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.