மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் தவித்த 120 ஆந்திர இளைஞர்கள் மீட்பு
மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் தவித்த 120 ஆந்திர இளைஞர்கள் மீட்பு
ADDED : ஜன 14, 2026 02:56 AM

அமராவதி: வெளிநாடுகளில் கவர்ச்சிகர சம்பளத்தில் வேலை என, நம் நாட்டு இளைஞர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று சைபர் குற்ற செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்திய கும்பலிடம் இருந்து, 120க்கும் மேற்பட்ட ஆந்திர இளைஞர்களை மத்திய அரசு மீட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, மியான்மர், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் மோசடி கும்பல்கள் அதிக அளவில் செயல்படுகின்றன.
துன்புறுத்தல்
இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் சில வேலைவாய்ப்பு இணைய தளங்கள் வழியாக தங்கள் நாடுகளில் தகவல் தொழில்நுட்பம், டேட்டா என்ட்ரி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை ஆகிய பிரிவுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை என, அறிவிப்பு வெளியிடுகின்றனர்.
இந்த பணிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் கூறுகின்றனர். இதனால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், கனவுகளுடன் வெளிநாடு செல்கின்றனர்.
அங்கு சென்றதும், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நம் நாட்டு இளைஞர்களை அழைத்து சென்று, அவர்களின் பாஸ்போர்ட், மொபைல் போன்களை பறித்துக்கொண்டு, சிறை போன்ற மோசடி மையங்களில் அடைத்து வைக்கின்றனர். அவர்களை இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பல்வேறு வகைகளில் ஆன்லைன் மோசடி செய்து பணம் பறிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இலக்கை எட்டாவிட்டால் துன்புறுத்தல், தாக்குதல், மின்சார அதிர்ச்சி, உணவு வழங்க மறுப்பு உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
6,700 இந்தியர்கள்
இது குறித்து மத்திய அரசுக்கு நிறைய புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், இது போன்று பிற இளைஞர்கள் ஏமாறாமல் தடுக்கவும் இந்திய துாதரகங்கள், வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் வரை வெளிநாட்டு சைபர் மோசடி கும்பலின் பிடியில் இருந்த, 6,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் பார்லிமென்ட்டுக்கு அளித்த பதிலில் கூறியிருந்தது.
அதில், கம்போடியா - 2,265 பேர்; லாவோஸ் - 2,290 பேர்; மியான்மரில் 2,165 பேர் மீட்கப்பட்டனர். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இவர்கள் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மீதமுள்ள இளைஞர்களையும் மீட்கும் பணி நடந்து வருவதாக ஆந்திர மாநில சி.ஐ.டி., இயக்குநர் ரவி சங்கர் தெரிவித்தார்.

