ADDED : பிப் 01, 2025 11:10 PM

'உடான்' எனப்படும், சாமானியருக்கான வானுார்தி திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில், 120 புதிய வழித்தடங்கள் இணைக்கப்படும். இதனால், கூடுதலாக நான்கு கோடி பயணியர் பயனடைவர். மலைப்பாங்கான மற்றும் வட கிழக்கு பிராந்திய மாவட்டங்களில் ஹெலிபேடுகள் மற்றும் சிறிய விமான நிலையங்களையும் இந்த திட்டம் ஆதரிக்கும்.
பீஹாரில் புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
லித்தியம் பேட்டரி வரி குறைப்பு
மின் சாதனங்களுக்கான, லித்தியம்- - அயன் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. இதன்படி, மின் வாகன பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும், 35 கூடுதல் பொருட்களுக்கும், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கான 28 பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பேட்டரி உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதி சார்ந்திருப்பதை குறைப்பதே இதன் நோக்கம்.
காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு உயர்வு
காப்பீட்டு துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும். ஆனால், இந்தியாவில் முழு பிரீமியத்தையும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும். வெளிநாட்டு முதலீட்டுடன் தொடர்புடைய தற்போதைய பாதுகாப்பு தடைகள் மற்றும் நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்படும்.
ரூ.2 கோடி வரை கடன்
முதன்முதலாக தொழில் துவங்கும் ஐந்து லட்சம் பெண்களுக்கும், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கும், 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
கடன் உத்தரவாதம் இரட்டிப்பு
கட்டுமானம், தொழிற்சாலை போல் அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் தொழில்களில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடன் உத்தரவாத தொகை 20 கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்படும். இதற்கான உத்தரவாத கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்படும்.