வட இந்தியாவை வறுத்தெடுக்கும் 121 டிகிரி வெயில்; கேரளாவில் கொட்டும் மழை
வட இந்தியாவை வறுத்தெடுக்கும் 121 டிகிரி வெயில்; கேரளாவில் கொட்டும் மழை
ADDED : மே 28, 2024 05:28 PM

திருவனந்தபுரம்: வட இந்தியாவில் பல மாநிலங்களில் 121 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் நிலையில், தென் இந்தியாவில் உள்ள கேரளாவின் கொச்சியில் மேகவெடிப்பால் கனமழை வெளுத்து வருகிறது.
வெயிலும், மழையும் காலநிலைக்கு ஏற்றவாறு மாறி மாறி வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இந்தியாவில் ஒருபக்கம் அதீத வெப்பமும், இன்னொரு பக்கம் கொட்டித்தீர்க்கும் கனமழையும் ஒரே காலநிலையில் நிகழ்ந்துள்ளது.
வட இந்திய மாநிலங்களான டில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தானில் எப்போதும் இல்லாத அளவாக 49.5 டிகிரி செல்சியஸ் (121 டிகிரி பாரன்ஹீட்) வரை வெயில் பதிவாகியுள்ளது.
இதனால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் வெப்ப அலை தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தென் இந்திய மாநிலமான கேரளாவில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், கொச்சியில் இன்று (மே 28) மேகவெடிப்பால் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது.
மேகவெடிப்பால் ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மி.மீ (சுமார் 10 செ.மீ) மழைப் பதிவாகியுள்ளது. கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கொளுத்தும் வெயிலும், கேரளாவில் கனமழையும் கொட்டித்தீர்ப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.