பசு கடத்துவதாக நினைத்து விபரீதம்! பள்ளி மாணவரை 30 கி.மீ. காரில் துரத்தி சுட்டுக்கொன்ற கும்பல்
பசு கடத்துவதாக நினைத்து விபரீதம்! பள்ளி மாணவரை 30 கி.மீ. காரில் துரத்தி சுட்டுக்கொன்ற கும்பல்
ADDED : செப் 03, 2024 08:53 AM

பரிதாபாத்: ஹரியானா மாநிலம், பரிதாபாதில் 12ம் வகுப்பு மாணவர் பசு கடத்தியதாக தவறுதலாக நினைத்து அவரை 30 கி.மீ., காரில் துரத்தி சென்று ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு; பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட சிலருக்கு பசுக்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படேல் சவுக் அருகில் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
அப்போது ஆர்யன் மிஸ்ரா என்ற 12ம் வகுப்பு மாணவர் நண்பர்கள் சங்கி, ஹர்சித் உள்ளிட்டோருடன் காரில் வந்து கொண்டு இருந்தார். காரை தடுத்து நிறுத்திய பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக் உள்ளிட்டோர் யார் என்று அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்களை வழிமறிப்பதைக் கண்ட ஆர்யன் மிஸ்ராவும் அவரது நண்பர்களும் பயந்தனர். நண்பர்களில் ஒருவரான சங்கிக்கு ஏற்கனவே சிலருடன் முன்விரோதம் இருந்ததால், தங்களைத் தான் அவர்கள் கொல்ல வந்திருப்பதாக நினைத்து தப்பிக்க எண்ணி காரில் பறந்துள்ளனர்.
பசுக் கடத்தல்காரர்கன் என்பதால் தான் அவர்கள் தப்பிப்பதாக நினைத்த பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக் உள்ளிட்டோர் மற்றொரு காரில் அவர்களை விடாது துரத்தி உள்ளனர். இரு குழுவுக்கு இடையே கிட்டத்தட்ட 30 கி.மீ., தூரம் கார் சேசிங் நடந்துள்ளது. பின்னர் கத்புரி அருகே ஆர்யன் காரை வழிமறித்த கும்பல், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் காரில் இருந்த ஆர்யன் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரின் உள்ளே 2 பெண்கள் இருப்பதை அப்போது தான் கண்ட பசுக்காவலர்கள், பசுக் கடத்தப்படுவதாக தாங்கள் நினைத்து தவறு என்பதை உணர்ந்து உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். தகவலறிந்த போலீசார், தப்பிய அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தி துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.