ADDED : மே 27, 2025 09:15 PM
ரோஹிணி: எம்.டி.என்.எல்., எனும் மாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் புதைத்த நிலத்தடி கண்ணாடி இழைவடங்களை திருடியதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோஹிணி செக்டார் 9ல் கடந்த மாதம் 6ம் தேதி நள்ளிரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் எம்.டி.என்.எல்., புதைத்த கண்ணாடி இழைவடங்களை திருடுவது தெரிய வந்தது. இதுதொடர்பாக பங்கஜ், 21, லக்கி, 18, அபிஷேக், 18, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 கிலோ கண்ணாடி இழை வடங்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கண்ணாடி இழை வடங்களை திருடும் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பல், பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தடி கண்ணாடி இழைவடங்களை வெட்டி, மதிப்புமிக்க கம்பியைப் பிரித்தெடுத்து, அவற்றை ஸ்கிராப் வியாபாரிகளுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
ரோஹிணி முழுவதும் இதேபோன்ற பல திருட்டுகளில் இந்தக் குழு ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.