ஜார்க்கண்டில் கார் விபத்து பீஹார் பக்தர்கள் 13 பேர் பலி
ஜார்க்கண்டில் கார் விபத்து பீஹார் பக்தர்கள் 13 பேர் பலி
UPDATED : நவ 29, 2026 05:06 PM
ADDED : நவ 29, 2026 05:06 PM

ராஞ்சி: பீஹாரில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற,`ஸ்கார்பியோ' கார் ஜார்க்கண்டில் விபத்துக்குள்ளானதில், நான்கு குழந்தைகள் உட்பட, 13 பேர் உயிரிழந்தனர்.
பீஹார் மாநிலம், நாளந்தா மாவட்டம், ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்த 14 பக்தர்கள், ஜார்க்கண்டில் உள்ள ரஜரப்பா கோவிலுக்கு வழிபாட்டுக்காக ஸ்கார்பியோ காரில் சென்றனர். ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி - பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் பைங்கி கிராமம் அருகே நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற, நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார். விபத்துக்கு காரணமான வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.
விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் போலீசாருடன் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் பலியான 13 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நபரை மீட்டு சதார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா, 2 லட்சம் ரூபாய், காயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
