ADDED : செப் 28, 2024 11:48 PM

பாட்னா: பீஹாரில் தொடர் கனமழையால் கங்கை, கோசி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தடுப்பணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கரையோரங்களில் வசித்த 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இடைவிடாது மழை
நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கங்கை உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பீஹாரின் எல்லை பகுதியில் அமைந்து உள்ள மாவட்டங்கள் நீரில் மூழ்கின.
பீஹாரிலும், கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கங்கை ஆற்றை ஒட்டியுள்ள பக்சர், போஜ்பூர், சரண், பாட்னா, பெகுசாராய் உட்பட 12 மாவட்டங்களில் ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், கரையோரங்களில் வசித்த 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதேபோல், கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிர்பூர், வால்மீகி தடுப்பணைகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு, 10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதையொட்டி, கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதற்கிடையே, பீஹாரின் முசாபர்பூர், கோபால்கஞ்ச், ஷிவான், வைஷாலி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி, நீர்நிலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.