2 பேருடனான காதலை எதிர்த்ததால் சொத்துக்காக வளர்ப்பு தாய் கொலை; 13 வயது மகள் வெறிச்செயல்
2 பேருடனான காதலை எதிர்த்ததால் சொத்துக்காக வளர்ப்பு தாய் கொலை; 13 வயது மகள் வெறிச்செயல்
ADDED : மே 17, 2025 11:54 PM

புவனேஸ்வர் : ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்த, 13 வயது மகளை வளர்ப்பு தாய் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்ததுடன், சொத்தை அபகரிக்கும் நோக்கில், காதலர்களுடன் சேர்ந்து, வளர்ப்புத் தாயை அவரது மகள் கொலை செய்துள்ளார்.
ஒடிஷாவின் கஜபடி மாவட்டம் பாரலாகேமுடியைச் சேர்ந்த, ராஜலட்சுமி, 54, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம், 29ம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ராஜலட்சுமியின், 13 வயது மகள் உறவினர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, புவனேஸ்வரில் வசிக்கும் ராஜலட்சுமியின் சகோதரர் சிபா பிரசாத் மிஸ்ரா, அந்த சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
ஆசை வார்த்தை
ராஜலட்சுமி இறந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், சிறுமியின், மொபைல் போனை எதேச்சையாக பார்த்த சிபா பிரசாத் மிஸ்ரா அதிர்ச்சி அடைந்தார். தன் சகோதரி கொலை செய்யப்பட்டதை அவர் தெரிந்து கொண்டார்.
இது தொடர்பாக, அந்தச் சிறுமிக்கும், சிலருக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் போலீசார் விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.
கடந்த, 14 ஆண்டுக்கு முன், சாலையோரம் கிடந்த, மூன்று நாள் பெண் சிசுவை, ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்தனர். அதற்கடுத்த ஓராண்டில், அவருடைய கணவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து தனி ஆளாக, மிகவும் கஷ்டப்பட்டு அந்த குழந்தையை ராஜலட்சுமி வளர்த்தார்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த, கோவில் பூஜாரியான, கணேஷ் ரத், 21, மற்றும் தினேஷ் சாகு, 20, ஆகிய இரண்டு பேரையும், அந்தச் சிறுமி காதலித்தார். இது தெரிந்ததும், எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி செய்யும் வேலையா என்று கூறி, ராஜலட்சுமி கண்டித்தார்.
இது குறித்து, காதலர்களிடம் அந்தச் சிறுமி பேசினார். ராஜலட்சுமியைக் கொலை செய்யலாம் என, காதலர்கள் கூறினர்.
அதன் வாயிலாக, அவருடைய நகை மற்றும் சொத்துக்களும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
அதன்படி, தன் வளர்ப்பு தாய்க்கு, மயக்க மருந்தை அந்தச் சிறுமி கொடுத்தார். மயங்கி விழுந்தவுடன், தன் காதலர்களை வரவழைத்து, மூவரும் சேர்ந்து, தலையணையால் ராஜலட்சுமியின் முகத்தை அழுத்தி கொன்றனர்.
விசாரணையில் அதிர்ச்சி
மயங்கிய நிலையில் இருந்தவரை, அவர்களே மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். ஆனால், எதுவும் தெரியாததுபோல், மாரடைப்பால் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் அந்தச் சிறுமி கூறினார்.
தாயின் நகைகளை, காதலர்களிடமும் கொடுத்து பணமாக்கினார். போலீஸ் விசாரணையில் இந்தத் தகவல்கள் அனைத்தும் தெரியவந்தன. அதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த மூன்று நாள் சிசுவை, தன் சொந்தக் குழந்தையாக வளர்த்த தாயை, காதலுக்காகவும், சொத்துக்காகவும், 13 வயது மகள் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.