பீஹாரில் வென்ற எம்எல்ஏக்களில் 130 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்!
பீஹாரில் வென்ற எம்எல்ஏக்களில் 130 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்!
ADDED : நவ 16, 2025 06:54 PM

பாட்னா: பீஹாரில் சட்டசபைக்கு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்களில் 130 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்களில் அதிக சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பீஹார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202ஐ வென்றுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வெறும் 35 தொகுதிகளே கிடைத்தன.
புதிய அரசு பதவியேற்பது எப்போது என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் சூழலில், வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களில் எத்தனை மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன? அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்பதை பற்றிய விவரத்தை ஏடிஆர் (Association for Democratic Reforms (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும், தேர்தல் கண்காணிப்பகமும் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு;
வெற்றி பெற்றுள்ள 243 எம்எல்ஏக்களில் கிட்டத்தட்ட 130 பேர் (பாதிக்கும் அதிகமானவர்கள்) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் குறிப்பிட்டு உள்ளவர்களில் 102 பேர் வக்கீல்கள். இவர்களில் 42 சதவீதம் பேர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள், கொலை முயற்சிகள், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள்.
இந்த எண்ணிக்கையில் உள்ளவர்களில் 3ல் ஒருவர் பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள். கொலை முயற்சியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியவர்களில் என்ற வகைப்பாட்டின் கீழ், பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தில் தலா 7 பேர் உள்ளனர்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி எம்எல்ஏக்களில் இருவரும், கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் மீதும் இதே குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வழக்கை சந்தித்து வருபவர்களில் பாஜ மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் தலா 3 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இந்த குற்றச்சாட்டின் கீழ் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியில் தலா ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் 25 பேர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். இவர்களில் 14 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இது 56 சதவீதமாகும். அதாவது, வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் அதிகப்படியான சதவீதம் பேர் மீது கிரிமினல் பின்னணியுடன் இருக்கும் கட்சியாக லாலுவின் கட்சி உள்ளது.
பாஜவில் தற்போது வென்று எம்எல்ஏ ஆன 89 பேரில் 43 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளனர். ஒட்டுமொத்த சதவீதத்தில் அடிப்படையில் இது 48 ஆகும். ஐக்கிய ஜனதா தளத்தில் வெற்றி பெற்ற 85 எம்எல்ஏக்களில் 23 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது 27 சதவீதம் ஆகும்.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 எம்எல்ஏக்களில் 4 பேர் மீதும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இதே புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

