13,000 சதுர கி.மீ., வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை
13,000 சதுர கி.மீ., வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை
ADDED : ஏப் 02, 2025 03:49 AM

புதுடில்லி: நம் நாட்டில் உள்ள வனப்பகுதிகளில், 7,506 சதுர கி.மீ., ஆக்கிரமிப்பில் உள்ளதாக, மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக, ஊடகங்களில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
இந்த விவகாரத்தை, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் புள்ளிவிபர அறிக்கை பெற்று, அதை தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
அந்த வகையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை:
கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுதும், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வனப்பகுதிகளில், 13,056 சதுர கி.மீ., நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், மத்திய பிரதேசத்தில் அதிகப்படியாக, 5,460 சதுர கி.மீ., வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக அசாமில், 3,620 சதுர கி.மீ., ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 157 சதுர கி.மீ., வனப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. டில்லி, ஹரியானா, பீஹார், தெலுங்கானா உட்பட, 10 மாநிலங்கள் ஆக்கிரமிப்பு புள்ளி விபரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.