ADDED : செப் 25, 2024 10:21 PM

பாலக்காடு : பாலக்காடு ரயில்வே சந்திப்பில், ரயில்வே பாதுகாப்பு படையும், கலால் துறையும் இணைந்து நடத்திய சோதனையில், 14.22 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே சந்திப்பில், எஸ்.ஐ., தீபக்கின் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினரும், இன்ஸ்பெக்டர் சாதிக் தலைமையிலான கலால் துறையினரும் இணைந்து, சோதனை நடத்தினர்.
அப்போது, நடைமேடையில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் நடத்திய சோதனையில், 14.22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த ரஹிதுல் சேக், 22, மாணிக் சேக், 22, ஆகியோர் என்பதும், கோல்கட்டாவில் இருந்து பெரும்பாவூருக்கு சில்லறை விற்பனை செய்வதற்காக, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிந்தன. கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.