திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: நம்பிக்கையை அசைக்க முடியாது என பக்தர்கள் உறுதி
திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: நம்பிக்கையை அசைக்க முடியாது என பக்தர்கள் உறுதி
ADDED : செப் 24, 2024 09:01 PM

திருப்பதி: திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இது குறித்து குஜராத் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் லட்டுவில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்ததற்கான தடயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி மறுத்து,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கைப்படி கடந்த 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
செப்., 19 ல் 3.59 லட்சம்
செப்.,20 ல் 3.17 லட்சம்
செப்.,21 ல் 3.67 லட்சம்
செப்.,22 ல் 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக சில பக்தர்களிடம் ஆங்கில மீடியாக்கள் பேட்டி எடுத்தன. அப்போது அவர்கள் கூறுகையில் , எங்களின் பக்தி வலிமையானது. அதனை அசைக்க முடியாது. லட்டு குறித்த சர்ச்சை கடந்த காலத்தில் நடந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக தினமும் 3 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.