மாளவியா நகர் குடும்பத்தில் 5 பேர் உட்பட 14 பேர் விபத்துக்களில் பலி
மாளவியா நகர் குடும்பத்தில் 5 பேர் உட்பட 14 பேர் விபத்துக்களில் பலி
ADDED : ஜூன் 18, 2025 06:32 PM

ஆக்ரா:உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட, ஐந்து விபத்துக்களில், டில்லி மாளவியா நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில், ஐந்து பேர் உட்பட, 14 பேர் உயிரிழந்தனர்.
புதுடில்லி மாளவியா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், ஆறு பேர், உ.பி., மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். திருமணம் முடிந்து டில்லிக்கு புறப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் ஜானிபூர் அருகே நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து உடனே தீப்பிடித்தது. காரில் இருந்த சுபைர், 28, தன்வீஸ்,26, மோமினா,24, ஜைனுல்,2 மற்றும் ஜெபா என்ற நிடா,23, ஆகிய ஐந்து பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கபட்ட குல்னாஸ்,28, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார் டிரைவர் தூங்கியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாம்பழ லாரி
உ.பி., மாநிலம் பிரோசாபாத்தில் இருந்து மாம்பழம் ஏற்றிச் சென்ற மினி லாரி, ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை-யில், மேம்பாலத்தில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சென்ற போது டிரைவர் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தது.
அதிகாலை நடைப்பயிற்சி முடித்து, பாலத்துக்கு கீழே உட்கார்ந்து இருந்த ராஜேஷ்,65, ராமேஷ்வர்,60, மற்றும் ஹரிபாபு,63, ஆகிய மூவர் மீதும் லாரி விழுந்து அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். லாரி டிரைவர் கிருஷ்ணா, 22,வும் உயிரிழந்தார். டிரைவர் தூங்கி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயம் அடைந்த கிளீனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்கு உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சுங்கச்சாவடியில் 2 பேர்
லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில் பதேஹாபாத் சுங்கச்சாவடியில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. டில்லியில் இருந்து பீஹார் சென்ற பஸ் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. பஸ்சில் இருந்த இரு பயணியர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த, 15 பயணியர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 இடத்தில் மூவர்
கிழக்கு உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டம் பச்சோகர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் திவாரி, ராஜேஷ் மற்றும் சந்தன் பாண்டே ஆகியோர் நேற்று முன் தினம் இரவு ஷாகஞ்சிலிருந்து ராபர்ட்ஸ்கஞ்சிற்கு பைக்கில் சென்றனர். பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது.
மூவரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தன் திவாரி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த சந்தன் பாண்டே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தியோரியா மாவட்ட, தியோரியா- - ருத்ராபூர் சாலையில் காளி மந்திர் அருகே நேற்று முன் தினம் இரவு, அதிவேகமாக வந்த லாரி மோதி, கூலித் தொழிலாளி லல்லன் நிஷாத்,45, உயிரிழந்தார்.