2000 அடி சுரங்கத்தில் அறுந்துவிழுந்த லிப்ட்: சிக்கி தவித்த 14 பேர்: 12 மணிநேரத்திற்கு பின்னர் மீட்பு
2000 அடி சுரங்கத்தில் அறுந்துவிழுந்த லிப்ட்: சிக்கி தவித்த 14 பேர்: 12 மணிநேரத்திற்கு பின்னர் மீட்பு
ADDED : மே 15, 2024 08:37 AM

ஜூன்ஜூனு: ராஜஸ்தானில் சுரங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் குழுவை சேர்ந்த 14 பேர் சென்ற லிப்ட் சுமார் 2000 அடி ஆழ பள்ளத்தில் அறுந்து விழுந்தது. இதில் சிக்கிய 14 பேரும் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்றிரவு (மே 14) கோல்கட்டாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு, 577 மீட்டர் (சுமார் 2 ஆயிரம் அடி) ஆழம் கொண்ட சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, மேல்பகுதிக்கு லிப்டில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, லிப்டின் கம்பி அறுந்ததில் சுரங்கத்தின் அடிப்பகுதியில் விழுந்து 14 பேர் சிக்கினர்.
பத்திரமாக மீட்பு
சிக்கியவர்களில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே, கேத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் பிரிவு தலைவர் ஜி.டி.குப்தா மற்றும் கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா ஆகியோரும் அடங்குவர். இதனையடுத்து இரவு முதல் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 12 மணிநேர மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை சுரங்கத்திற்கு வெளியே இருந்த மருத்துவக்குழு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தது.
இது குறித்து ஜூன்ஜூனு அரசு மருத்துவமனை நர்சிங் ஊழியர்கள் கூறுகையில், ''சிலருக்கு கைகளிலும், சிலருக்கு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்'' என்றனர்.
டாக்டர் பிரவின் சர்மா கூறுகையில், ''சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

