பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
ADDED : டிச 26, 2025 12:09 PM

புதுடில்லி: வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரரான, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு, பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது ( ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் , இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்களுக்கான விருதை டில்லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை கிரிக்கெட் போட்டிகளில் சாதனை மேல் சாதனை குவித்து வரும் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பீஹார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 36 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனையை படைத்தார். மேலும் 59 பந்துகளில் 150 ரன் எட்டியபோது அதிவேக 150 ரன்கள் எடுத்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் 84 பந்துகளில் 190 ரன் குவித்தார்.
இவர் ஏற்கனவே 2025 பிரீமியர் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன் அடித்து, டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் ஆனார். அதுமட்டுமில்லாமல், அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் 95 பந்தில் 171 ரன் சேர்த்தார். 56 பந்தில் சதம் அடித்தார்.

