ADDED : பிப் 10, 2024 06:20 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், வரும் 12ம் தேதி முதல், 23ம் தேதி வரை, பெங்களூரு விதான் சவுதாவை சுற்றி 2 கி.மீ., சுற்றளவுக்கு, 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், வரும் 12ம் தேதி, பெங்களூரு விதான் சவுதாவில் துவங்குகிறது. இந்த கூட்டம், வரும் 23ம் தேதி வரை, 10 நாட்களுக்கு நடக்க உள்ளது.
முதல் நாளில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். 16ம் தேதி, முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் ஆண்டுக்குரிய மாநில பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதற்கான ஏற்பாட்டை சட்டசபை அலுவலகம் செய்து வருகிறது. வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது, பல்வேறு அமைப்பினர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவர்.
இந்நிலையில், வரும் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை, விதான் சவுதாவை சுற்றி 2 கி.மீ., சுற்றளவுக்கு, 144 தடை விதித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, நேற்றிரவு உத்தரவிட்டார்.
சுதந்திர பூங்காவில் நடக்கும் போராட்டத்துக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூட்டமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை பகுதியில், பேரணி நடத்தவும், பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்லவும்; பிரச்னையை துாண்டும் வகையில் கோஷம் எழுப்பவும், பாடல் பாடவும் உட்பட பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.