சிலை கரைப்பு ஊர்வலத்தில் கல் வீச்சு ராஞ்சியில் 144 தடை உத்தரவு
சிலை கரைப்பு ஊர்வலத்தில் கல் வீச்சு ராஞ்சியில் 144 தடை உத்தரவு
ADDED : பிப் 18, 2024 01:19 AM

ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சரஸ்வதி சிலையை கரைக்க நடந்த ஊர்வலத்தின் மீது ஒரு தரப்பினர் கல் வீசியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் நகரி பகுதியில் நேற்று முன்தினம் சரஸ்வதி சிலையை கரைப்பதற்காக, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஒரு தரப்பினர், ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர்.
பதிலுக்கு ஊர்வலம் சென்றவர்களும் கற்களை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ராஞ்சி போலீஸ் கமிஷனர், எஸ்.பி., உட்பட உயர் அதிகாரிகள் அப்பகுதியில் நள்ளிரவு வரை முகாமிட்டு பாதுகாப்பை உறுதி செய்தனர். இதுவரை 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில், 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பீஹாரின் தர்பங்கா மாவட்டம், பாஹிரா பகுதியில் நடந்த சரஸ்வதி சிலை ஊர்வலத்திலும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.