மின் தாக்குதலில் 149 யானைகள் பலி; ஒடிசா அரசு புள்ளிவிபரத்தால் அதிர்ச்சி!
மின் தாக்குதலில் 149 யானைகள் பலி; ஒடிசா அரசு புள்ளிவிபரத்தால் அதிர்ச்சி!
ADDED : டிச 10, 2024 05:45 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் மின்சாரம் தாக்கி மட்டும் 149 யானைகள் பலியாகி உள்ளன என்று மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா கூறினார்.
இன்று ஒடிசா சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யானைகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா பதிலளித்து கூறியதாவது:
மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளின் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு மின்சாரம் தாக்குதலே முக்கியக் காரணம். நோய்கள், விபத்துக்கள், வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதன்படி,2014-15 மற்றும் 2024-25 (டிசம்பர் 2 வரை) 149 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. வேட்டைக்காரர்கள் 30 யானைகளைக் கொன்றனர்.
நோய்களாலும் அதிக எண்ணிக்கையாக 305 யானைகள் உயிரிழந்தன. இயற்கை மரணங்களாக 229 யானைகள் இறந்திருக்கின்றன. ரயிலில் அடிபட்டு 29 யானைகள் உயிரிழந்தது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் 90 யானைகள் இறந்ததன் பின்னணியில் எந்த காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. மேலும், யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் 16 யானைகள் இறந்தன.
2018-19ம் ஆண்டில் தொண்ணூற்று மூன்று யானைகள் இறந்தன. இதுவே யானைகள் இறந்ததில் மிக மோசமான ஆண்டாகும்.
2014-15ம் ஆண்டில் 54 யானைகள் இறந்த நிலையில், 2022-23 ல் 92 யானைகள் இறந்துள்ளன. இது இந்த 11 ஆண்டுகளில் மிகக் குறைவு.
2023-24 ஆண்டில் மாநிலத்தில் 66 யானைகள் இறந்த நிலையில், நடப்பு ஆண்டு டிசம்பர் 2 வரை இந்த எண்ணிக்கை 67 ஆக உள்ளது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, ஒடிசாவின் வெவ்வேறு காடுகளில் 2,103 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கணேஷ் ராம் சிங்குந்தியா கூறினார்.