15 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்: முழு விபரம் இதோ!
15 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்: முழு விபரம் இதோ!
ADDED : பிப் 07, 2024 12:20 PM

புதுடில்லி: அ.தி.மு.க.,வை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ. தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., பேச்சுவார்த்தையை துவங்கி உள்ளது. அதேநேரத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ., இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
சமீபத்தில் பா.ஜ., உடன் உறவை முறித்து கொள்வதாகவும், இனி பா.ஜ., உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில், அதிமுக உடன் கூட்டணிக்காக பா.ஜ.,வின் கதவு திறந்து உள்ளது என மத்திய உள்துறை அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு மற்றும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் (கரூர்), பி.எஸ். கந்தசாமி(அரவக்குறிச்சி), கோமதி சீனிவாசன்( வலங்கைமான்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.துரைசாமி(கோவை), எம்.வி.ரத்தினம்(பொள்ளாச்சி),
வாசன்(வேடச்சந்தூர்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), அருள் (புவனகிரி), ராஜேந்திரன், தங்கராசு (ஆண்டிமடம்), குருநாதன், வி.ஆர். ஜெயராமன் (தேனி), பாலசுப்ரமணியன் (சீர்காழி), சந்திரசேகர் (சோழவந்தான்) உள்ளிட்ட 15 பேர் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., ஆர்வம் காட்டி வரும் நிலையில், 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

