டில்லியில் விடாது பெய்த கனமழை; பல்வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
டில்லியில் விடாது பெய்த கனமழை; பல்வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
ADDED : அக் 08, 2025 07:27 AM

புதுடில்லி; டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்க, கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் பலமணி நேரம் காத்திருந்து செல்லும் சூழல் உருவானது. கடுமையான போக்குவரத்து பாதிப்பால் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்ல வேண்டியவர்கள் உரிய நேரத்திற்கு சென்று சேரமுடியாத நிலைமை ஏற்பட்டது.
வானிலையில் நிலவிய திடீர் மாற்றம் காரணமாக, டில்லியில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. டில்லிக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வரவேண்டிய விமானங்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஜெய்பூர், லக்னோ, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. டில்லியில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களின் சேவையிலும் காலதாமதம் நிலவியது. விமான சேவையில் நிலவிய தாமதம் மற்றும் பாதிப்பு காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சப்தர்ஜங் பகுதியில் 14.6 மிமீ மழை பதிவாகி உள்ளது. பாலம் பகுதியில் 52.5 மிமீ, மயூர் விஹாரில் 29.5 மிமீ, பிடம்புராவில் 16 மிமீ, ஜனக்புரியில் 9.5 மிமீ மழை பெய்துள்ளது.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் பயணத்தை சரியாக திட்டமிடுமாறு விமான நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.