மேற்கு வங்க கலவரத்தில் 150 பேர் கைது; வீடுகளை விட்டு வெளியேறும் ஹிந்துக்கள்
மேற்கு வங்க கலவரத்தில் 150 பேர் கைது; வீடுகளை விட்டு வெளியேறும் ஹிந்துக்கள்
ADDED : ஏப் 14, 2025 03:53 AM

கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக, 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுட்டி, துலியன், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக, கடந்த 8ல் போராட்டம் நடந்தது.
இது வன்முறையாக மாறியதை அடுத்து, போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாகின. பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு, பொது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம், மால்டா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் எதிரொலித்தது.
முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறையில், தந்தை - மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதில், ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கலவரத்தை தொடர்ந்து, முர்ஷிதாபாதின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், கொல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக, அதிகளவில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, 400க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக, பா.ஜ., மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் மத துன்புறுத்தல் உண்மையானது. திரிணமுல் காங்கிரசின் தாஜா அரசியல், தீய சக்திகளுக்கு தைரியத்தை அளித்துள்ளது.ஹிந்துக்கள் வேட்டையாடப்படுகின்றனர். சொந்த மண்ணில் நம் மக்கள் உயிருக்கு பயந்து ஓடுகின்றனர்,” என்றார்.