ADDED : டிச 22, 2024 09:59 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் மின்சாரம் திருடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பழமையான ஹனுமன் கோவில் பாழடைந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே, சம்பல் மாவட்டத்தின் சண்டாசி பகுதியில் பழமையான படிக்கிணறு இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 400 மீட்டர் கொண்ட அந்த படிக்கிணறு 4 தளங்களை கொண்டுள்ளது. அதில், 2வது மற்றும் 3வது தளங்கள் மார்பிள் கற்களை வைத்தும், மேல் தளம் செங்கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4 அறைகள் இருந்துள்ளது. பிலாரி அரசரின் தாத்தா அரசராக இருந்த போது, இந்த படிக்கிணறு கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா பென்சியா கூறுகையில், 'இந்த படிக்கிணறு முழுக்க முழுக்க களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது. மேல் இருக்கும் மண்ணை நாகர் பலிகா குழு அகற்றியுள்ளது. தற்போது, வெளியே 210 சதுர மீட்டர் மட்டுமே உள்ளது. எஞ்சிய பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' எனக் கூறினார்.