பெங்களூரில் பிப்., 10 - 14 வரை 15வது சர்வதேச விமான கண்காட்சி
பெங்களூரில் பிப்., 10 - 14 வரை 15வது சர்வதேச விமான கண்காட்சி
ADDED : அக் 18, 2024 11:11 PM

பெங்களூரு: பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில், வரும் பிப்ரவரி 10 - 14 வரை, 15வது சர்வதேச விமான கண்காட்சி நடக்க உள்ளது.
பெங்களூரு நகரம் தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டுமே பெயர் பெற்ற நகரம் அல்ல. விண்வெளி, ராணுவம், கல்வி இப்படி பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில், 1996 முதல் பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், ராணுவம் சார்பில், சர்வதேச விண்வெளி கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்பின், 1998, 2001, 2003, 2005, 2007, 2009, 2011, 2013, 2015, 2017, 2019, 2021, 2023 என இதுவரை 14 முறை, 'ஏரோ இந்தியா' எனும் சர்வதேச விமான கண்காட்சி நடந்துள்ளது.
வெவ்வேறு நகரங்களுக்கு கண்காட்சியை மாற்ற முயற்சித்தும், பெங்களூரு தான் சரியான இடம் என, 15வது கண்காட்சியையும் இங்கேயே நடத்துவதாக ராணுவ அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தி துறை அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு, 15வது சர்வதேச விமான கண்காட்சி நடக்க உள்ளது. ஆசியாவின் மிக பெரிய விமான கண்காட்சி என்பதால், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டும் அவர் தான் துவக்கி வைத்தார்.
முதல் நாளில், அலுவலக நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், வணிக ஒப்பந்தங்கள் நடக்கும். பிப்., 11, 12 ஆகிய இரு நாட்கள் வணிகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும். பிப்., 13, 14ல் பொது மக்கள் விமான கண்காட்சி ஸ்டால்களை பார்க்கலாம்.
டிக்கெட் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு, https://www.aeroindia.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
கடந்தாண்டு, 80 நாடுகள் கண்காட்சியில் பங்கேற்றன. 100 சர்வதேச மற்றும் 700 உள்நாட்டு நிறுவன ஸ்டால்கள் இடம்பெற்றன.

