அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய 16 வங்கதேசத்தவர் நாடு கடத்தல்
அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய 16 வங்கதேசத்தவர் நாடு கடத்தல்
ADDED : நவ 02, 2025 11:09 PM
குவஹாத்தி:  வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய 16 பேரை கைது செய்து நாடு கடத்தியதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஸ்ரீபூமி, கச்சார், துப்ரி, தெற்கு சல்மரா - மங்கசார் மாவட்டங்கள் நம் அண்டை நாடான வங்கதேசத்துடன் 267 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. மேலும் இங்குள்ள ஸ்ரீ பூமியின் சுத்தர்கண்டி பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட  அரசியல் கலவரத்தை அடுத்து, அந்நாட்டினர் எல்லை வழியே நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் சம்பவங்கள் நடந்தன. இவ்வாறு அசாமுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர், 16 பேரை போலீசார் கைது செய்தனர்; அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இது குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளதாவது:
தீய நோக்கத்துடன் அசாமுக்குள் சட்ட விரோதமாக புகுந்த 16 வங்கதேசத்தவ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த ஸ்ரீபூமி போலீசாரை பாராட்டுகிறேன். 16 வங்கதேசத்தவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது போன்று சட்ட விரோதமாக அசாமுக்குள் நுழையும் வங்க தேசத்தவரை  கைது செய்து, நாடு கடத்தும் நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'எனினும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வங்கதேசத்தில் இருந்து அசாமுக்கு வர அனுமதிக்கப்படுவர்' என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

