ADDED : ஜன 17, 2025 04:59 PM

புதுடில்லி: '' உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 16 இந்தியர்களை காணவில்லை,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உள்ளன. போர் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் ரஷ்யா, வெளிநாடுகளை சேர்ந்தவர்களையும் தங்கள் ராணுவத்தில் இணைத்துக் கொள்கிறது. இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய தரப்பில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களில் சிலரை விடுவித்து மத்திய அரசு தாயகம் அழைத்து வந்தது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களில், 96 பேர் தாயகம் திரும்பிவிட்டனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் அங்கு இருக்கும் நிலையில், மேலும் 16 பேர் எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.