தசரா விழாவை ரசித்த 16 லட்சம் பேர் 10 நாட்களில் ரூ.500 கோடி வர்த்தகம்
தசரா விழாவை ரசித்த 16 லட்சம் பேர் 10 நாட்களில் ரூ.500 கோடி வர்த்தகம்
ADDED : அக் 16, 2024 07:17 AM
மைசூரு : தொடர்ந்து 10 நாட்கள் நடந்த மைசூரு தசரா விழாவை, 16 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாகவும், 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மைசூரில் தசரா விழா நடந்த 10 நாட்களும், நகரின் ஒவ்வொரு திசையிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தபடி இருந்தது. பஸ், ரயில், விமானம், கார், பைக் என பல வகையான வாகனங்கள் வாயிலாக, சுற்றுலா பயணியர் மைசூரில் குவிந்தனர். அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மஹாராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்திருந்தனர்.
இம்முறை தசரா விழா துவங்குவதற்கு முன்னரே, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு, நாட்டின் பிரபல சமூக வலைதள பிரபலங்கள் மைசூருக்கு அழைத்து வரப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டது. இவர்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்தனர்.
நாட்டின் பல நகரங்களில் இருந்து, பலரும் மைசூருக்கு படையெடுத்தனர். அக்., 3 முதல், 12ம் தேதி வரை, 10 நாட்கள் தசரா விழாவை 16 லட்சம் பேர் கண்டுகளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், கர்நாடகாவில் இருந்து மட்டுமே 80 சதவீதம் பேரும்; மற்ற பகுதிகளில் இருந்து, 20 சதவீதம் பேரும் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹோட்டல், சுற்றுலா துறை, உணவகங்கள் என அனைத்து தரப்பினருக்கும் மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹோட்டல் துறையில் மட்டுமே 110 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.