ADDED : பிப் 21, 2024 06:51 AM

பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்காக, புதிதாக 163 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருவதாக, அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து, கர்நாடகா மேலவையில் பா.ஜ., உறுப்பினர்கள் சலுவாதி நாராயணசாமி, ஹனுமந்த நிரானி நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமைச்சர் சிவராஜ் தங்கடகி அளித்த பதில்:
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் தற்போது 2,445 மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் 1,620 விடுதிகள் சொந்த கட்டடங்களிலும், 628 விடுதிகள் வாடகை கட்டடங்களிலும், 197 விடுதிகள் இலவச கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. மாணவர்கள் வசதிக்காக புதிதாக 163 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
விடுதியில் தங்கி படிக்கும், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியருக்கு மாதம் 1,750 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான சீருடை, காலணிகள், காலுறைகள், பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

