பாஜவுக்கு தாவும் அதிருப்தி திரிணமுல் எம்பிக்கள் 17 பேர்... துர்கா பூஜைக்குள் நடக்கும் மாற்றம்
பாஜவுக்கு தாவும் அதிருப்தி திரிணமுல் எம்பிக்கள் 17 பேர்... துர்கா பூஜைக்குள் நடக்கும் மாற்றம்
ADDED : செப் 14, 2026 06:53 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 17 பேர், துர்கா பூஜைக்கு முன்பாக, பாஜவில் இணைய இருப்பதாக அதிருப்தி எம்பிக்களில் ஒருவரான ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களை வென்றது. அதன்பிறகு, இந்தாண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. இதனால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்கள் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜவில் இணைந்தனர்.
அதேபோல, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் 20 பேர் அம்மாநிலத்தில் உள்ள தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு முன்பாக, என்சிபிஐ கட்சியில் இணைந்த அதிருப்தி திரிணமுல் எம்பிக்கள் 20 பேரில் 17 பேர், பாஜவில் இணையப் போவதாக அதிருப்தி எம்பிக்களில் ஒருவரான எம்பி ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜவில் இணைய வேண்டும் என்று தான் ஆரம்பத்தில் முடிவெடுத்து இருந்தோம். ஆனால், அபுதாஹிர் மற்றும் மேலும் இரு எம்பிக்களின் எதிர்ப்பால் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டு, தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய வேண்டியதாயிற்று. வரும், துர்கா பூஜைக்குள் 20 எம்பிக்களில் 17 பேர் பாஜவில் இணைய இருக்கிறோம், எனக் கூறினார்.
அதேவேளையில், முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களான கான், கலிலுர் ரஹ்மான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் பாஜவில் இணைய விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும், எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து பசுனியாவுக்கு நாங்கள் எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை என்று எம்பி கான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கட்சி மாறி வரும் எம்பிக்களை சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்று மேற்கு வங்க பாஜ தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
