17 மாணவியருக்கு பாலியல் தொல்லை தலைமறைவான சாமியாருக்கு வலை
17 மாணவியருக்கு பாலியல் தொல்லை தலைமறைவான சாமியாருக்கு வலை
ADDED : செப் 25, 2025 01:26 AM

புதுடில்லி: டில்லியில், உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார், அங்கு பயிலும் 17 மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்த நிலையில், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தீவிர சோதனை
கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள சாரதா மடத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவியர் பலர் பயின்று வருகின்றனர். இங்கு, மேலாளராக சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார் உள்ளார். இவர் இயற்பெயர் பார்த்தசாரதி.
இவர் மீது, அங்கு பயிலும் 32 மாணவியர் பாலியல் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, 17 மாணவியருக்கு, 'மொபைல் போன்' மூலம் ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை தந்ததுடன், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாமியாரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து, அவரைப் பற்றி அங்குள்ள பேராசிரியர்களிடம் மாணவியர் புகார் அளித்தனர்.
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சாமியார் சொல்வதை கேட்கும்படி மாணவியரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மாணவியர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், குற்றச்சாட்டுக்குள்ளான கல்வி நிறுவனத்தில் புகுந்து போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவியரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். அதன்படி, சாமியாருக்கு ஆதரவாக ஆசிரம நிர்வாகிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், துாதரகத்தின் பெயரில் போலி பதிவு எண்ணுடன் அந்த கார் இயக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை கைது செய்யும் பணியை போலீசார் தீவிரப்படுத்திஉள்ளனர்.
விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் கமிஷன் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிஉள்ளது.
இதற்கிடையே, உயர்கல்வி நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சைதன்யானந்தாவை நீக்கியுள்ளதாக சாரதா மடம் தெரிவித்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளது.
சாமியார் மீது பாலியல் புகார்கள் எழுவது, இது முதல் முறையல்ல. 2009ல் இவர் மீது, மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2016ல், பெண் ஒருவர் சாமியார் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.