மணிப்பூரில் கலவரம் நடந்த 17 மாதத்துக்கு பின் மெய்டி, கூகி, நாகா எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை
மணிப்பூரில் கலவரம் நடந்த 17 மாதத்துக்கு பின் மெய்டி, கூகி, நாகா எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை
ADDED : அக் 16, 2024 02:55 AM
புதுடில்லி,முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதம் மெய்டி - கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மணிப்பூரில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்த நிலையில், கடந்த ஆக., - செப்., மாதங்களில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இதற்கிடையே, மெய்டி - கூகி பிரிவினரிடையே உள்ள வேறுபாடுகளை களையவும், பிரச்னைக்கு தீர்வு காணவும், மணிப்பூரில் நிரந்தர அமைதியை கொண்டு வரவும், மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
நிரந்தர தீர்வு
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஏ.கே.மிஸ்ரா தலைமையில், டில்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மெய்டி பிரிவில் இருந்து மாநில சட்டசபை சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் டோங்பிராம் ராபிந்த்ரோ, பசந்தகுமார் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
கூகி பிரிவைச் சேர்ந்த பா.ஜ.,வின் மாநில அமைச்சர்கள் லெட்பாவ் ஹாக்கிப், நெம்சா கிப்ஜென்; நாகா பிரிவில் இருந்து நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் ராம் முய்வா, அவங்போ நியூமாய், எல்.டிகோ ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மெய்டி - கூகி பிரிவினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது; பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது; மணிப்பூரில் நிரந்தர அமைதியை கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பங்கேற்கவில்லை
இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.
மணிப்பூரில் கலவரம் நடந்த 17 மாதங்களுக்கு பின், மெய்டி - கூகி - நாகா சமூகங்களின் எம்.எல்.ஏ.,க்கள், முதன்முறையாக நேற்று சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.