17 பேர் மர்ம மரணம்: ஜம்முவில் மத்திய அமைச்சக குழு ஆய்வு
17 பேர் மர்ம மரணம்: ஜம்முவில் மத்திய அமைச்சக குழு ஆய்வு
ADDED : ஜன 22, 2025 02:18 AM
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்ம நோயால் உயிரிழந்த நிலையில், இரண்டாவது நாளாக அங்கு உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
பரிசோதனை
இதில், அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த மூன்று குடும்பத்தினரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புள்ளவர்கள்.
அவர்கள் அனைவரும் எந்தவிதமான நோயால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியாத நிலையில், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நோய் பரவலுக்கான காரணம் தெரியாத நிலையில், பாதல் கிராமத்தில் வீடுவீடாக சென்ற சுகாதார துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த சூழலில், பாதல் கிராமத்தில் மர்ம நோய் குறித்து ஆய்வுசெய்ய மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமித்தார்.
மத்திய அரசின் சுகாதாரத் துறை, வேளாண், ரசாயனம் மற்றும் உரம், நீர்வளத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பதவியில் உள்ள அதிகாரி தலைமையிலான குழு, பாதல் கிராமத்தில் நேற்று முன்தினம் ஆய்வை துவங்கியது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அருகில் உள்ள குடும்பங்களிடம் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் குழு விசாரணை நடத்தியது.
விசாரணை
இரண்டாவது நாளாக நேற்றும், பாதல் கிராமத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், கிராம மக்களிடம் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
மூன்று குடும்பங்களில் உயிர் பிழைத்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து, நிவாரணம் வழங்குவதிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் மத்திய குழு பணியாற்றும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.