இருப்பதோ 133 திரண்டு வந்தோர் 18,000: உத்தரகண்டில் ராணுவ பணிக்கு தான்
இருப்பதோ 133 திரண்டு வந்தோர் 18,000: உத்தரகண்டில் ராணுவ பணிக்கு தான்
ADDED : நவ 22, 2024 01:02 AM

டேராடூன், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் பிராந்திய ராணுவத்திற்கு 133 பேரை தேர்வு செய்ய நடந்த முகாமில், 18,000 பேர் திரண்டதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராணுவத்திற்கு மண்டல அளவில் வீரர்களை தேர்வு செய்ய முகாம் நடத்தப்படும். அந்த வகையில், 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவத்திற்கு 133 பேரை தேர்வு செய்ய, உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் முகாம் நடந்தது. இதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களில் இருந்து 18,000 பேர் திரண்டனர்.
கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைக்கும் நிலை ஏற்பட்டது. ஆள்சேர்ப்பு முகாமிற்கு வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தவறியதாக, மாவட்ட நிர்வாகம் மீது இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர்.
போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் இல்லாததால், கடும் சிரமத்துக்கு இடையே வந்ததாக கூறினர்.
இது குறித்து, முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் மேலும் கூறியதாவது:
பித்தோராகருக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பலர் பஸ் கூரைகளின் மீது பயணம் செய்து வந்தனர். டாக்சி ஓட்டுனர்கள் கூட்டத்தை பார்த்த பின், நபர் ஒருவருக்கு 1,000 ரூபாய் என கட்டணத்தை அதிகரித்தனர்.
பல்வேறு சிரமங்களுக்கிடையே ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இடத்துக்கு வந்தால், இங்கு தங்கும் வசதிகள் இல்லை; சாலையிலும், புல்வெளியிலும் பேனர்களை விரித்து படுத்து துாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பித்தோராகர் கலெக்டர் கூறுகையில், ''உ.பி., மற்றும் பீஹார் இளைஞர்களுக்கு பீஹாரின் தனபூரில் ஆள்சேர்ப்பு முகாம் நடப்பதாக இருந்தது.
நவ., 26க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உ.பி.,யிலிருந்து ஏராளமான இளைஞர்கள் பித்தோராகருக்கு வந்துள்ளனர். இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.
''இருப்பினும், இளைஞர்கள் வந்து செல்ல 100 அரசு பஸ்கள், 250 டாக்சிகள் மற்றும் தங்குவதற்காக 30 பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், 18 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, ஆள்சேர்ப்பு முகாமுக்கு வந்தவர்களுக்கு இலவசமாக உணவு பரிமாறப்பட்டது,” என்றார்.