ADDED : டிச 20, 2024 05:34 AM
பெலகாவி: ''சமீப நாட்களில் பெங்களூரு நகர் உட்பட கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த 24 பாகிஸ்தானியர்கள், 159 வங்கதேசத்தவரை கைது செய்துள்ளோம்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
மாநிலத்துக்குள் அவ்வப்போது அத்துமீறி நுழையும், வெளிநாட்டவரை கண்காணிக்க, பெங்களூரு நகரில் சிறப்பு பிரிவு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து, பெங்களூரு வருவோர் குறித்து, வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து தகவல் பெறப்படுகிறது. இங்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த மண்டல டி.சி.பி.,க்கள் நடவடிக்கை எடுப்பர்.
டி.சி.பி.,க்கள் மட்டுமின்றி, மத்திய குற்றப்பிரிவும் கூட, சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். பெங்களூரை தவிர மற்ற நகரங்கள், மாவட்டங்களில் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவரை கண்டுபிடிக்க, சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு செயல்படுகிறது.
சமீப நாட்களில் பெங்களூரு நகர் உட்பட, கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த 24 பாகிஸ்தானியர்கள், 159 வங்கதேசத்தவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.