காஷ்மீர் தாக்குதல் பற்றி அவதுாறு; அசாம், திரிபுராவில் 19 பேர் கைது
காஷ்மீர் தாக்குதல் பற்றி அவதுாறு; அசாம், திரிபுராவில் 19 பேர் கைது
ADDED : ஏப் 28, 2025 01:15 AM

குவஹாத்தி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ., பத்திரிகையாளர், ஆசிரியர்கள், மாணவர் உட்பட, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, 'இது மத்திய அரசின் சதி,' என கூறிய அசாமைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் என்பவர் கைதானார்.
அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கமான 'பேஸ்புக்'கில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என பதிவிட்ட ஜாபிர் உசைன் என்ற பத்திரிகையாளர், அசாம் பல்கலை மாணவர் பகுதீன், வழக்கறிஞர் மஜும்தார் உட்பட எட்டு பேர் நேற்று முன்தினம் கைதாகினர்.
இதுபோல, சமூக வலைதளங்களில், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை அசாமில் மட்டும் 14 பேர் கைதான நிலையில், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
இதுபோல, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தலாயை சேர்ந்த ஜவஹர் தேவ்நாத், தர்மாநகரை சேர்ந்த சஜல் சக்கரவர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.
இவர்கள் உட்பட நான்கு பேர், திரிபுராவில் கைது செய்யப்பட்டனர். மேகாலயாவில், செய்தி சேனல் ஒன்றின் சமூக வலைதள பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு, தேச விரோத கருத்துகளை பதிவிட்ட சைமன் சில்லா என்பவர் கைதானார்.
மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று வரை, மொத்தம் 19 பேர் கைதாகினர்.