sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.19 கோடி! போக்குவரத்து விதிமீறல் வசூல்: 4 மாதங்களில் சாதனை படைத்த போலீசார்

/

ரூ.19 கோடி! போக்குவரத்து விதிமீறல் வசூல்: 4 மாதங்களில் சாதனை படைத்த போலீசார்

ரூ.19 கோடி! போக்குவரத்து விதிமீறல் வசூல்: 4 மாதங்களில் சாதனை படைத்த போலீசார்

ரூ.19 கோடி! போக்குவரத்து விதிமீறல் வசூல்: 4 மாதங்களில் சாதனை படைத்த போலீசார்


ADDED : மே 12, 2024 07:04 AM

Google News

ADDED : மே 12, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகள் மீறியதாக, 13.61 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18.61 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் பலரும் விதிகளை மீறிச் செல்கின்றனர். பணிக்குச் செல்வோர் 'சிக்னல் ஜம்ப்' செய்வது; சிலர் 'ஒன்வே' சாலையில் செல்வது; நடைபாதையில் ஓட்டுவது என, பல போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர்.

இவர்களை ஆங்காங்கே காத்திருக்கும் போலீசார் மடக்கிப் பிடிக்கின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துகள் நேரிடுகின்றன.

இதனால் மாநில டி.ஜி.பி.,யாக இருந்த பிரவீன் சூட், 'சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்த வேண்டாம். விதிமீறும் வாகனங்களின் எண்களை மொபைல் போனில் படம் பிடித்து, அவர்களுக்கு தகவல் அனுப்பி, அபராதம் வசூலியுங்கள்' என, உத்தரவிட்டார்.

இதையடுத்து, போக்குவரத்து போலீசாரும், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்துவதை தவிர்த்தனர். இதை வாகன ஓட்டிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதால், விதிமீறல்கள் அதிகரித்தன.

இதைத் தடுக்கவும், நகரின் பாதுகாப்புக்காகவும், நகர் முழுதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவற்றின் மூலம் கண்காணித்து வந்த போலீசார், விதிமீறல் செய்த வாகன ஓட்டிகளின் வாகன எண்ணை பயன்படுத்தி, அபராதம் செலுத்த அவர்களுக்கு ரசீது அனுப்பி வந்தனர்.

ஆனாலும், விதிமீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மொபைல் எண்


இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் போக்குவரத்து, பாதுகாப்பை கண்காணிக்க நகரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

போக்குவரத்து விதிகளை மீறுவோர், குற்றம் செய்வோர், இந்த கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றனர். விதிமீறியவர்களை கண்டுபிடித்து, அபராதம் கட்ட அவர்களின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து உள்ளன. அதே வேளையில் லோக்சபா தேர்தல் பிரசாரம் காரணமாக, ஏப்ரலில் போக்குவரத்து விதிமீறல் குறைந்து உள்ளது.

ஜனவரியில் 8.47 லட்சம்; பிப்ரவரியில் 7.79 லட்சம்; மார்ச்சில் 7.43 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ஏப்ரலில் 6.90 லட்சம் என மொத்தம் 30.61 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவர்களிடம் இருந்து இதுவரை 18.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 50,000 ரூபாய்க்கு மேல் விதிமீறல் செய்தவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது.

விபத்துகள்


மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1,633 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 310 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,376 பேர் படுகாயம் அடைந்துஉள்ளனர்.

விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் கட்ட தகவல் வந்தால், பெங்களூரு போக்குவரத்து போலீசின், https://btp.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று, 'பே யுவர் பைன்' என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின், 'கர்நாடகா ஒன்' என்ற லிங்க் திறக்கப்படும். அதில், உங்கள் வாகனத்தின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து உங்கள் வாகனம் எங்கெங்கு விதிமீறல் செய்துள்ளது என்பதை படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அதில் 'பே பைன் ஆன்லைன்' பட்டனை கிளிக் செய்து, அபராதம் செலுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது.

அதிக கட்டணம்


இதையடுத்து, ஜனவரி முதல் ஏப்ரல் வரை அடிக்கடி நடத்திய சோதனையில், 1,287 ஆட்டோ ஓட்டுனர்கள், அதிக கட்டணம் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டனர்.

இது போன்று ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகக் கட்டணம் கேட்டால், 080 - 2286 8444, 2286 8550 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

'வீலிங்' செய்ததாக 191 வழக்குகள்

பெங்களூரு தெற்கு போக்குவரத்து டி.சி.பி., சிவபிரகாஷ் தேவராஜ் கூறியதாவது:இரு சக்கர வாகனங்களில் 'வீலிங்' செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 121 நாளில், 'வீலிங்' செய்ததாக, 191 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 27 பேர் சிறுவர்கள்.'வீலிங்', பைக் சாகசம் செய்வதை தடுக்க விரைவில் ஆன்லைன் பிரசாரம் செய்ய பெங்களூரு போக்குவரத்து போலீஸ் முடிவு செய்துள்ளது.இதன் மூலம் தங்கள் பகுதியில் யாராவது 'வீலிங்', பைக் சாகசம் செய்வதை பார்த்தால், உடனடியாக பெங்களூரு போக்குவரத்து போலீசின் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் தவறு செய்பவர்கள் மீது அப்பகுதி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பர்.'வீலிங்' செய்வதில் பெரும்பாலும் காரேஜில் பணியாற்றுபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 'வீலிங்', பைக் சாகசம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்ய, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சிபாரிசு செய்யப்படும்.'வீலிங்' செய்பவர்கள் சிறுவர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். சிறுவர்களாக இருந்தால், அவர்களின் விபரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, சிறுவர்களுக்கு 25 வயது முடியும் வரை 'ஓட்டுனர் உரிமம்' கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us