இடுக்கிக்கு 6 மாதங்களில் 19.5 லட்சம் பயணிகள் வருகை
இடுக்கிக்கு 6 மாதங்களில் 19.5 லட்சம் பயணிகள் வருகை
ADDED : ஆக 22, 2025 11:24 PM

மூணாறு:கேரளா இடுக்கிக்கு ஆறு மாதங்களில் 19.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்
இம்மாவட்டத்தில் மூணாறு, வாகமண், தேக்கடி உட்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. அவற்றில் மாறுபட்ட சுற்றுச்சூழல், கால நிலை, பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் பயணிகள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
இங்கு மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் கீழ் 12 சுற்றுலாப்பகுதிகள் உள்ளன. அவற்றை ஜன. 1 முதல் ஜூலை 31 வரை 19,42,354 பயணிகள் பார்த்து ரசித்தனர். மழை உட்பட பல்வேறு காரணங்களால் பல நாட்கள் சுற்றுலா பகுதிகள் மூடப்பட்ட போதும் பயணிகள் வருகை அதிகரித்தது. இதே பகுதிகளை கடந்தாண்டு 33,86,012, 2023ல் 29,22, 043 பயணிகள் ரசித்தனர். இந்தாண்டு ஓணம் உட்பட முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களில் வர உள்ளதால் கடந்த ஆண்டுகளை விட பயணிகள் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலிடம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட வாகமண் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அங்கு மலை குன்று, சாகச பூங்கா, கண்ணாடி நடைபாலம் உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளதால் பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் மலைகுன்றுக்கு 5,43,979, சாகச பூங்காவுக்கு 5,08,505 பயணிகள் சென்றனர்.
அதேபோல் மூணாறில் தாவரவியல் பூங்கா இரண்டாம் இடத்தை பிடித்தது. அதனை கடந்த ஆறு மாதங்களில் 3,15,317 பயணிகள் ரசித்தனர். ராமக்கல்மேடு 1,43,480, பாஞ்சாலிமேடு 1,09,219, ஸ்ரீ நாராயணபுரம் நீர்வீழ்ச்சி 85,375, ஆமைபாறை 71,264, இடுக்கி ஹில் வியூ பூங்கா 67,370, மாட்டுபட்டி அணை 66,159, அருவிகுழிக்கு 15,707 பயணிகள் வந்தனர்.