ரூ.3200 கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெங்களூருவில் 2 பேர் கைது
ரூ.3200 கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெங்களூருவில் 2 பேர் கைது
ADDED : ஜன 30, 2025 03:02 AM
பெங்களூரு:பெங்களூரு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், 3200 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி., மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகத்தின் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.
இவர்களுக்கு ஒரு நிறுவனம் போலி பில்கள் மற்றும் போலி நிறுவனங்கள் வாயிலாக ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபடுவது குறித்து தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெங்களூரு மற்று மும்பையில் அந்நிறுவனம் தொடர்புடைய 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 3,200 கோடி ரூபாய்க்கு மேல் போலி பில்களை தயாரித்திருப்பதும், மேலும் போலி ஆவணங்கள் வாயிலாக 665 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளீட்டு வரியில் பலனடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பெங்களூரு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரக கூடுதல் இயக்குனர் சுசேதா ஸ்ரீஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
விசாரணையில், தொழில் நடவடிக்கை இல்லாத 15 சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பலசரக்கு பொருட்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளன. ஆனால் தகவல் தொழில்நுட்ப உதவி, தொழிலுக்கான ஆலோசனை மற்றும் விளம்பரம் போன்ற சேவைகளுக்கான ரசீதுகளை மட்டுமே வைத்துள்ளன.
இந்த, 15 போலி நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு இடையே சுற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவாயை உயர்த்தி காட்டியுள்ளனர்.
இதனால் பங்குகளின் விலை அதிகரித்ததும், தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்று, நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிறுவனங்களின் பெரும்பாலான ஜி.எஸ்.டி., ரிட்டர்ன்கள் ஒரே இணைய முகவரிகளில் இருந்து தாக்கலாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலாகியுள்ள போலி நிறுவனங்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

