ADDED : நவ 23, 2024 06:17 AM
பெங்களூரு, : கோலாரில் உள்ள வங்கியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, 3.47 கோடி ரூபாய் கடன் வாங்கி, ஏமாற்றிய வழக்கில் தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கவயல் தாலுகா, கேசம்பள்ளியில் படேல் வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டிக்கு சொந்தமான நிலத்தில் லே - அவுட் அமைக்க, தங்கவயலை சேர்ந்த சங்கமித்ரா, ஆரோக்கியதாஸ் ஆகியோர், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கோலார் கிளையில் 3.37 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு வங்கி மேலாளர் விஸ்வநாத் ரெட்டி கடன் வழங்கியுள்ளார்.
கடனை திருப்பிச் செலுத்தாததால், வங்கியின் ஊழியர் பார்த்தசாரதி நாயுடு, கோலார் போலீஸ் நிலையத்தில் மே மாதம் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.
இதில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, இருவரும் கடன் பெற்றதும், இதற்கு வங்கி மேலாளர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதனால், விஸ்வநாத் ரெட்டி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வங்கி மேலாளருக்கு உதவியாக இருந்த நட்ராஜ், கடன் பெற்ற சங்கமித்ரா, தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் ஆரோக்கிய தாஸ் உட்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வங்கியின் முன்னாள் மேலாளர் விஸ்வநாத் ரெட்டி தலைமறைவானார். சங்கமித்ரா, ஆரோக்கிய தாஸ் ஆகிய இருவரை, கோலார் சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில், மற்ற 15 பேரும் தலைமறைவாக உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.