2 டாக்டர்கள் மீதான வழக்கு: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
2 டாக்டர்கள் மீதான வழக்கு: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : பிப் 12, 2025 07:04 AM
பெங்களூரு : முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்த பெண், கோமா நிலையில் இறந்தது தொடர்பாக, இரண்டு டாக்டர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரு, சாந்திநகரில் வசிப்பவர் முனிராஜ். இவரது மனைவிக்கு, 2009ம் ஆண்டு முதுகுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் மகேஷ், “அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்றார். இதற்கு முனிராஜ் சம்மதித்தார்.
கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், முனிராஜ் மனைவி, திடீரென கோமாவுக்கு சென்று உயிரிழந்தார். முனிராஜ் அளித்த புகாரில் டாக்டர் மகேஷ், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யகோரி, இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி உமா விசாரித்தார். இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி உமா நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் கூறுகையில், ''இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை இன்னும் துவங்கப்படவில்லை.
அறுவை சிகிச்சையில் குளறுபடி நடந்து இருப்பதாவும், அதன்பின் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் பிரதிவாதி கூறி உள்ளார். விசாரணை அறிக்கையிலும் அது தான் கூறப்பட்டுள்ளது. இது பிரதிவாதிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இருவரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.