UPDATED : பிப் 13, 2025 11:29 AM
ADDED : பிப் 13, 2025 01:13 AM

பிரயாக்ராஜ்: மகா பவுர்ணமி நாளான நேற்று (பிப்12) , திரிவேணி சங்கமத்தில் 2 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு அருகே கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றாக கலக்கும் இடத்தில், கடந்த மாதம் 13ல் மஹா கும்பமேளா எனும் புனித நீராடல் நிகழ்ச்சி துவங்கியது. இந்த மாதம் 26ல் வரவுள்ள அமாவாசையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது. மகா பவுர்ணமி நாளன்று அதிகமான பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடினர்.
நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, 2 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக கடும் விரதம் இருந்து, தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த 10 லட்சம் 'கல்பவாசி'கள் எனும் பக்தர்கள், நேற்று காலை முதல் அங்கிருந்து படிப்படியாக வெளியேற துவங்கினர்.
இதற்காக, உ.பி., மாநில அரசு நிர்வாகம் விரிவான பல ஏற்பாடுகளை செய்திருந்தது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அதிகாலை 4:00 மணிக்கே, தலைநகர் லக்னோவில் தன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'வார் ரூம்' வந்து, பக்தர்கள் புனித நீராட செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பக்தர்கள் வெளியேறும் இடங்களிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

