உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 28, 2025 10:15 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் ஹைதர்கர் பகுதியில் அவசனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடியிருந்தனர். குரங்குகளால் அறுந்து விழுந்த மின்சார கம்பி தகரக் கொட்டகையின் மீது விழுந்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தது முபாரக்புரா கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (22), மற்றும் திரிவேதி (30) என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
அவர், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மான்சா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.