ஏ.டி.எம்.,மில் ரூ.93 லட்சம் கொள்ளை துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர்கள் பலி
ஏ.டி.எம்.,மில் ரூ.93 லட்சம் கொள்ளை துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர்கள் பலி
UPDATED : ஜன 16, 2025 11:53 PM
ADDED : ஜன 16, 2025 11:52 PM

பீதர்: கர்நாடகாவின் பீதரில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, 93 லட்சம் ரூபாயுடன், கொள்ளையர்கள் தப்பியோடினர்.
கர்நாடகாவில் உள்ள பீதர் நகரின் சிவாஜி சதுக்கம் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இதில் பணம் நிரப்ப, சி.எம்.எஸ்., என்ற ஏஜென்சியின் ஜீப் நேற்று காலை 11:00 மணிக்கு வந்தது.
பணப்பெட்டியை ஊழியர்கள் கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகியோர் இறக்கியபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை துாவினர்.
பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த நபரும், முக கவசம் அணிந்த நபரும், ஊழியர்களிடம் இருந்து பணப்பெட்டியை பறிக்க முயற்சித்தனர்.
அவர்கள் தர மறுத்து போராடவே, இருவர் மீதும் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், கிரி வெங்கடேஷ், அதே இடத்தில் உயிரிழந்தார். சிவகுமார் படுகாயம் அடைந்தார்.
பைக்கில் வந்த கொள்ளையர்கள், 93 லட்சம் ரூபாய் அடங்கிய பண பெட்டியுடன் தப்பினர். அங்கிருந்த மக்கள், அவர்கள் மீது கற்களை எறிந்து தடுக்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர்.
படுகாயம் அடைந்த சிவகுமார், பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜீப் ஓட்டுநர் ராஜசேகர், காயமின்றி உயிர் தப்பினார்.
பணம் டிபாசிட் செய்ய வந்தவர்களுக்கு பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வரவில்லை. இச்சம்பவத்தை பார்க்கும் போது, திட்டமிட்டு கொள்ளை அடித்திருப்பது தெரிகிறது.
எஸ்.பி., பிரதீப் குன்டே கூறுகையில், ''கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
''பீதரின் அருகில் தெலுங்கானா மாநிலம் அமைந்துள்ளதால், கொள்ளையர்கள் அங்கு தப்பி சென்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது. கொள்ளையர்களை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.
பீதரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள், அருகில் உள்ள தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் அப்சல்காஞ்ச் பகுதிக்கு சென்றதாக தகவல் கிடைத்தது. பீதர் போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்சல்காஞ்ச் சென்ற இரு கொள்ளையர்களும், அங்கிருந்த ரோஷன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் ஆம்னி பஸ் மூலம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். டிராவல்ஸ் நிறுவன மேலாளர், கொள்ளையர்களின் பையை சோதனையிட முயன்றதால், அவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அங்கிருந்து தப்பினர்.
தகவல் அறிந்த ஹைதராபாத் போலீசார் அங்கு வந்தனர். படுகாயம் அடைந்த மேலாளரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பிய கொள்ளையர்கள், ஹைதராபாதில் இருந்து வெளியேறாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
படம்: கிரி வெங்கடேஷ்
17_DMR_0003, 17_DMR_0004, 17_DMR_0005
பணப்பெட்டியுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள். (அடுத்த படம்) ஆம்புலன்ஸ் வரும் வரை நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த சிவகுமார். (கடைசி படம்) சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.